ருஹூணு பல்கலைக்கழகம் மற்றும் நாரா நிறுவனத்தின் அழைப்பிற்கமையவே சீனாவின் யுத்தக் கப்பலொன்று ஒக்டோபரில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன கப்பலின் வருகையால் மீண்டும் பிராந்தியத்துக்குள் சர்ச்சை ஏற்பட இடமளிக்காமல் , அரசாங்கம் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சீன ஆராய்ச்சி கப்பலொன்று அம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் , இந்தியா அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் ஸ்திரமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
தற்போது இந்திய ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பரபரப்பாக இது தொடர்பில் பேசப்படுகிறது. ருஹூணு பல்கலைக்கழகம் மற்றும் நாரா நிறுவனம் இணைந்தே இதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. இவ்வாறான ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
இதே போன்றதொரு யுத்தக் கப்பல் இதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டமையால் பிராந்தியத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது இவ்வாறான கப்பல்களின் வருகை தொடர்பில் விதிமுறையாக்கமொன்று தயாரிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த போதிலும் , இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக இலங்கை இருக்க முடியாது. வெளிவிவகார கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். சர்வதேச வர்த்தகம் , வெளிவிவகாரக் கொள்கைகளை சீராக முன்னெடுக்க ஜனநாயக மூலாதாரங்களின் பிரகாரம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து முன்னோக்கி செல்ல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

