ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஆகின்றது ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு என்கிறது புள்ளி விவரங்கள். அங்கு ஆடுகளத்தின் தரம் எப்படி இருக்கும்?
அதுதான் நேற்று ராஜஸ்தான் தோல்விக்குக் காரணம் என்றாலும். 155 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் என்ற நிலையிலிருந்து அடுத்த 9 ஓவர்களில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து அதுவும் ஆல் அவுட் ஆகாமல் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தோல்வி கண்டது, ஒரு வேளை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு உரித்தான ‘உஷ் கண்டுக்காதீங்க’ ரக போட்டியோ என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றது.
என்ன இருந்தாலும் ஐபிஎல் தொடருக்கு கடந்த வருடம்தான் லக்னோ அணியின் என்ட்ரி இருந்தது. பெரிய முதலீட்டில் அணியை உருவாக்கியுள்ளனர். அந்த அணி குறைந்தது பிளே ஆஃப் வரைக்கும் வருவதுதானே சரியாக இருக்கும் என்ற கணக்கீடு இருக்குமோ என்னவோ? சிஎஸ்கேவும் மும்பையும் ஐபிஎல் தொடரின் எப்போதுமான செல்லப்பிள்ளைகள், குஜராத்தும், லக்னோவும் புதிதாக வந்துள்ள செல்லப்பிள்ளைகள். ஆகவே மற்ற அணிகள் இவர்களுக்கு வழிவிடத்தானே வேண்டும்?
முதல் கேள்வி பிட்ச் ஏன் இப்படிப் போடப்பட்டது? இரண்டாவது கேள்வி 1400 நாட்களுக்கும் மேல் அதாவது 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐபிஎல் போட்டியை இங்கு நடத்த வேண்டிய அவசியம் என்ன? மூன்றாவது கேள்வி பிசிசிஐ-யிடம் என்ன நிதி வசதி இல்லையா? நல்ல பிட்ச்களைத் தயார் செய்ய நிதி இல்லையா? நான்காவது கேள்வி, கிரிக்கெட்டையும் அழித்து, வீரர்களின் தன்னம்பிக்கையையும் அழிக்கும் இத்தகைய டி20 பிட்ச்களினால் என்ன பயன்?

