இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் அதிகபட்ச விலைகளை மாத்திரம் தீர்மானிக்கக் கூடியவாறு புதிய எரிபொருள் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக , விரைவில் கியூ.ஆர். கோட்டாவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இம்மாதம் முதல் எரிபொருளுக்கான புதிய விலை சூத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதாவது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை மாத்திரம் தீர்மானிக்கப்படும். விநியோக நிறுவனங்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையின் கீழ் தாம் விரும்பும் விலைகளில் எரிபொருளை விற்பனை செய்ய முடியும்.
இதன் ஊடாக எரிபொருட்களின் விலைகளை குறைப்பதிலும் நிறுவனங்களுக்கிடையில் போட்டித்தன்மை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கமைய இனிவரும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு எரிபொருட்களுக்கும் அதிகபட்ச விலைகளை மாத்திரமே பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானிக்கும்.
அதற்கமைய விரைவில் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் , மத்திய வங்கியுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கியூ.ஆர். கோட்டாவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அல்லது இனிவரும் காலங்களில் முற்றாக கியூ.ஆர். முறைமையை நீக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
வழங்கப்பட்டுள்ள கியூ.ஆர். கோட்டாவில் 60 சதவீதம் மாத்திரமே மக்களால் பாவிக்கப்படுகிறது. எனவே எஞ்சியுள்ள 40 சதவீத இடைவெளியை நிரப்ப முடியும். அதற்கமைய கோட்டாவை அதிகரிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

