IPL 2023 | லக்னோ – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு லக்னோ அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 ஆட்டங்களில் 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமாகவே இருக்கும். அதேவேளையில் லக்னோ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும்.

கடந்த ஆண்டு தனது அறிமுக சீசனிலேயே லக்னோ அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் மோஹன் பகான் கால்பந்து அணியின் சீருடையை பிரதிபலிக்கும் மெரூன், பச்சை நிறம் கலந்த சிறப்பு சீருடையில் களமிறங்க உள்ளது.

கொல்கத்தா அணிக்கு இந்த சீசன் ஏற்ற, இறக்கமாகவே இருந்துள்ளது. அந்த அணி அடைந்த 7 தோல்விகளில் ஈடன் கார்டனில் வீழ்ந்த 4 ஆட்டங்களும் அடங்கும். பேட்டிங்கிலும், வேகப் பந்துதுறையிலும் அனுபவம் இல்லாத வீரர்கள் காணப்படுகின்றனர். ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கே 235 ரன்களையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 228 ரன்களையும் வேட்டையாடி இருந்தது. இந்த வகையில் லக்னோ அணியும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முயற்சி செய்யக்கூடும்.

கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சீரான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பெரிய அளவிலான வெற்றியை பெற்றாலும் தனது அடுத்த சுற்று வாய்ப்புக்கு சில அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *