இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருவதால் ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி இருந்தது வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்புவரை மழை பெய்ததும் இந்த அச்சத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் மழை வழிவிட ஆட்டம் குறித்த நேரத்தில் தொடங்கியது. ஈரப்பதம் கொண்ட மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருந்தது. ஆனால், டாஸ் அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணி முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் தடுமாறியதுபோல் இன்றும் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டது. ஷுப்மன் கில், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறி ஷாக் கொடுத்தார். கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதும், 13 ரன்களுக்கு அவரும் ஸ்டார்க்கின் வேகபந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.


