“ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர என்னால் முடியும்” – ட்ரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வர தன்னால் முடியும் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், ”அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால், அதோடு அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவுடன் ஒரே நாளில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனும் என்னால் எளிதாகப் பேச முடியும்.

அதேநேரத்தில், இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான எனது வியூகம் குறித்து இப்போது கூற முடியாது. நான் மேற்கொள்ளும் உத்தி எளிதானதாகவும், பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண்பதாகவும் இருக்கும். கடந்த 2020 தேர்தலின்போது நான் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகி இருந்திருந்தால் இந்த போரே ஏற்பட்டிருக்காது. ஏனெனில், அந்த அளவுக்கு எனக்கும் புதினுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடக்கும் என தோன்றவில்லை. அதேநேரத்தில், இந்த காலம் மிகவும் நீண்டது. இதற்கிடையில் போர் மிகவும் மோசமடைவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் போர் முடிவடையாவிட்டால் அது மூன்றாம் உலகப் போராகக் கூட மாறலாம். அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போரைவிட மிக மோசமானதாக இந்த மூன்றாம் உலகப் போர் இருக்கலாம். அதோடு இது அணுஆயுத போராகவும் மாறலாம்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *