அனைவரின் அன்பு, ஆதரவு, பிரார்த்தனைகளுக்கு நன்றி :பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

சிகிச்சைக்கு இந்திய அரசு பக்கபலமாக இருந்து உதவி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தரப்பில் ட்வீட் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இளையராஜா, ஏஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம் பாம்பே ஜெயஸ்ரீ-யின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று காலை பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில், ‘மருத்துவ சிகிச்சைகள் பலன் அளித்துள்ளன. ஜெயஸ்ரீ உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லண்டன் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பணி வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. சிகிச்சைக்கு இந்திய அரசும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவி வருகிறது. அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *