சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் முதலாம் கட்ட கடன் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய 333 மில்லியன் டொலர்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஊடகப் பிரதானிகளுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த திங்களன்று அனுமதியளித்தது. அதற்கமையயே இக் கடன் திட்டத்தின் முதற்கட்டமாக 333 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் சுமார் 3 பில்லியன் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பரில் எட்டப்பட்டது.
அதனையடுத்து இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 5 மாதங்களின் பின்னர் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கமைய இது தொடர்பான ஆவணம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

