சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், 2018-ம் அண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் ஷி யு-வை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-17, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவுடன் மோதுகிறார் பிரனாய்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தின் ஜென்ஜிரா ஸ்டேடல்மேனை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-9, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றிபெற்றார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியுடன் மோதுகிறார் சிந்து.

