சாந்தன் நாடு திரும்புவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை – அரசாங்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேச்திரராசா என்பவர் மீண்டும் நாடு திரும்புவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, சாந்தன் இலங்கை திரும்புவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது தொடர்பில் கடந்த நாட்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் பேசியிருந்தனர். இவ்விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால் அவர் நாட்டுக்கு வர முடியும் எனத் தீர்மானம் திங்கட்கிழமை (5) எடுக்கப்பட்டது.

எனவே இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடி அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கூறலாம். அவர் நாட்டுக்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இதற்குப் பிரத்தியேகமாக அனுமதி வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரிடம் கடவுச்சீட்டு இருந்தால் அவரால் நாட்டுக்கு வர முடியும்.

அவர் மீது நாட்டில் ஏதாவது குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் நாடு திரும்ப முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *