நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின்சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவமுடையதாகும். குறித்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உள்நாட்டில் மாத்திரமின்றி, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவற்றை மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

காணொளியூடாக விசேட அறிவித்தலொன்றை விடுத்து இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

நாட்டை வங்குரோத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தீர்க்கமானதாகும். நாட்டுக்காக இளம் தலைமுறையினர் எவ்வாறு சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதற்கு இது சிறந்த முன்னுதாரணமாகும். நீதிமன்றம் தண்டனை வழங்கவில்லை என்ற போதிலும், இவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாவர்.

எவ்வாறிருப்பினும் இவர்களிடமிருந்து நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே நாட்டில் கொள்ளையடித்து வெ வ்வேறு நாடுகளிலும் இவர்கள் சேமித்து வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அதே போன்று உள்நாட்டில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அவற்றை அரசுடைமையாக்கவும், மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும் முடியும்.

வரிகளை மேலும் மேலும் அதிகரித்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதை விட, இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை கையப்படுத்தி அவற்றின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்திடம் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

உடனடியாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன். அமைச்சரொருவர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தவறு என்று விமர்சித்துள்ளார். அதனை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். நீதிமன்றத்தின் தீர்ப்பினை எவராலும் விமர்சிக்க முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *