தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ நாட்டில் இடம் பெறவில்லை. அது தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரம் குறைந்த எரிபொருள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். அவ்வாறு தரம் குறைந்த எரிபொருள் எந்த வகையிலும் நாட்டுக்கு கொள்வனவு செய்யப்படவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.
இந்திய நிறுவனம் மூலம் நேற்று முன் தினம் இரவு எரிபொருள் அடங்கிய கப்பல் துறைமுகத்துக்கு வருகை தந்தது. அதிலிருந்த டீசல் பரிசோதனையின் பின்னர் கப்பலிலிருந்து இறக்கப்பட்டுள்ளது. குறித்த டீசல் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அது சம்பந்தமான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எந்த தரமற்ற எரிபொருளும் கப்பலில் இருந்து இறக்கப்படவில்லை.
பரிசோதனையின் பின்னர் அதன் தரம் தொடர்பில் சந்தேகம் தொடருமானால் மீண்டும் அது திருப்பியனுப்பப்படும் அவ்வாறு இல்லாவிட்டால் மாத்திரமே அது கப்பலிலிருந்து இறக்கப்படும். என்றாலும் தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டுள்ளன. அது தொடர்பில் தாம் கவலையடைகிறோம் என்றார்.

