உத்தேச உள்ளுராட்சி மன்ற தேர்தலை மேலும் ஒருவருட காலத்திற்கு ஒத்திவைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஜனாதிபதி தேர்தலை 2024 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான தீர்மானத்தை அரச உயர் மட்டம் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான கால எல்லைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு கிடைக்கப்பெறுகின்றது. அதன் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் உடனடி ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல கூடிய அதிகாரம் கிடைக்கப்பெறுகின்றது.
இதனடிப்படையிலேயே ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கத்தின் உயர் மட்டம் எடுத்துள்ளது. எனவே தான் உத்தேச உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதில் இழுத்தடிப்புகள் இடம்பெறுகின்றன. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையன நிதி கிடைக்கப்பெற்றால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும் என்றும் சம்மந்தப்பட்ட தரப்புகளிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

