60 அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளிடமிருந்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களால் வட்டி வருமானத்திலிருந்து அறவிடப்பட்ட 05 வீத வருமான வரி முற்பணத்தை மீள செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, வருடாந்த வருமானம் 12 இலட்சத்திற்கு மேற்படாத வரி வருமானம் மீதான முற்பண வரி அறவிடப்பட்டுள்ள அனைத்து சிரேஷ்ட பிரஜைகளும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
சிரேஷ்ட பிரஜைகள் ஒரு காலாண்டுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபா வரை மீளப் பெறலாம் என்பதுடன், அந்த மீளப் பெறுகையானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முடிவடையும் காலப்பகுதியை கொண்டிருத்தல் வேண்டும்.
தகுதி வாய்ந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீளப்பெறும் தொகை, சிரேஷ்ட பிரஜைகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் சிரேஷ்ட பிரஜைகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தோ அல்லது அருகிலுள்ள நகர அலுவலகத்திற்குச் சென்றோ விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதிவாய்ந்தோர் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் இது தொடர்பான அனைத்து தகவல்களையும் 1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

