தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது செப்டெம்பர் மாதம் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி கடந்த ஓகஸ்ட் மாதம் 5.4 சதவீதமாகப் பதிவாயிருந்த உணவுப்பொருட்களின் விலைகள் செப்டெம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
அதேவேளை ஓகஸ்டில் 9 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவல்லாப்பொருட்களின் விலைகள் மற்றும் கட்டணங்கள் செப்டெம்பரில் 5.9 சதவீதமாகப் பதிவாகின.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த காலங்களில் இதற்கு முன்னர் ஒருபோதுமில்லாத அளவுக்கு மிகவும் உயர்வான பணவீக்கத்தை இலங்கை பதிவுசெய்திருந்த போதிலும், கடந்த ஜுன் மாதம் முதல் பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தது. இது ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைவதற்குப் பெரிதும் பங்களிப்புச்செய்தது.
பொருளாதார நெருக்கடியைச் சீரமைப்பதை முன்னிறுத்தி இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இறுக்கமான நாணயக்கொள்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மறுசீரமைப்புக்கள் என்பவற்றின் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே குறிப்பிட்டிருந்த பின்னணியிலேயே, இத்தகைய தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

