காசா மோதல்கள் தொடர்பில் கூட்டு அறிக்கையை வௌியிட ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் இடையே இணக்கப்பாடு

காசா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றை வௌியிடுவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில் நேற்று(17) இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர் Anwaar ul Haq Kakar சந்தித்துள்ளார். 

காசா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பில், இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன், கூட்டு அறிக்கையொன்றை வௌியிடுவதற்கும் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன, மத, இன வேறுபாடுகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெறுப்பு, கோபம் அற்ற, மனிதநேயம் நிரம்பிய பொதுச் சமூகத்தை உருவாக்குவதே முழு உலகத்திற்குமான எதிர்கால சவாலாகும் என இரு தலைவர்களும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். 

பாகிஸ்தானும் இலங்கையும் தற்போது முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Anwaar ul Haq Kakar ஆகியோர் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *