வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக  மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நஹாரியா, அக்கோ, ஹைஃபா, திபெரியாஸ் மற்றும்  நசரேத் நகரங்கள் தற்போது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மேற்குறிப்பிட்ட வடக்கு நகரங்களில் உள்ள இலங்கையர்கள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை  கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இஸ்ரேலிய அரசாங்கம் இந்த பகுதிகளில் துருப்புக்களை அனுப்பியுள்ளது மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்று  தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் இராணுவம் காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி 24 மணி நேரத்திற்குள் இடம்பெயரவேண்டும் என விடுத்துள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவம் அத்தகைய உத்தரவை உறுதிப்படுத்தாத போதிலும், இது வரவிருக்கும் தரைவழித் தாக்குதலைக் குறிக்கும் என்று கூறப்பட்டது. இஸ்ரேல், வியாழன் அன்று, தரைவழித் தாக்குதலுக்குத் தயாரான போதும் இன்னும்  முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

பாரிய மனிதாபிமான விளைவுகள் இன்றி இந்த இடப்பெயர்வு இடம்பெற முடியாது என ஐநா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *