இலங்கை மின்சாரசபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வரை, குறுகிய காலத்துக்கு தற்காலிகமாக மின் கட்டண சுமையை சுமக்க நேரிடும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவையில் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய இடைவெளியை நிரப்பும் வகையில் விலை சூத்திரத்தை தயாரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனவே சிரமத்துக்கு மத்தியிலேனும் இவற்றை தாங்கிக் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டம் ஈடு செய்யப்படும் வரை இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது என்று மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார். இதற்கு ஏதேனும் மாற்று வழிகள் காணப்பட்டால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராகவுள்ளது.
இவை தொடர்பில் குறிப்பிட்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் பரந்தளவில் ஆராய்ந்து உரிய தீர்மானத்தை எடுக்கும். கடந்த காலங்களில் மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தமையால், அண்மையில் பல மணித்தியாலங்கள் மின் வெட்டுக்கு செல்ல வேண்டியேற்பட்டது.
அவ்வாறானதொரு நிலைமைக்கு மீண்டும் செல்லாமல், அதனை விட சிறந்த நிலைமைக்குச் செல்லும் வகையில், தற்காலிகமாக குறுகிய காலத்துக்கு இந்த சுமையை சுமக்க வேண்டியேற்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவையில் தெரிவித்தார் என்றார்.

