உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் காணப்பட்டது அடிப்படைவாத குழுவல்ல. அதனை விட பாரிய சூத்திரதாரிகள் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளனர் என்பது இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படக் கூடியவாறு நேர்மையானதும் , வெளிப்படையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் வலியுறுத்துவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அத்தோடு இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்ட நபர்களை தமது குற்றங்களை ஏற்றுக் கொண்டால் அவர்களை மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் , ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை பழிவாங்க இடமளிக்கப் போவதில்லை என்றும் பேராயர் சுட்டிக்காட்டினார்.
கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.

