Channel 4வின் குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ஸ பதில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  Channel 4 தொலைக்காட்சி வௌியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பான Channel 4 அலைவரிசையின் புதிய திரைப்படம்” எனும் தொனிப்பொருளில் 4 பக்க நீண்ட அறிக்கை அமைந்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் வௌியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். 

Channel 4 இன் சமீபத்திய திரைப்படமானது அது முன்னர் வௌியிட்ட படங்களைப் போலவே பொய்களின் திணிவு என்றும் 2005 ஆம் ஆண்டு முதலே ராஜபக்ஸ பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் Channel 4 செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தன்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு தற்கொலை தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுவது அபத்தமானது என அவர் கூறியுள்ளார். 

“எனக்கு எதிராக சில அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், நான் பதவியில் இருந்தபோது ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். போர் முடிவுக்கு வந்த பின்னர், மடு தேவாலயத்தின் மறுசீரமைப்பிற்கும் முள்ளிக்குளம் தேவாலயத்தின் புனரமைப்பிற்கும் நான் உதவினேன். புனித பாப்பரசரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளுக்கு நான் உதவியதுடன், விஜயத்தின் ஒருங்கமைப்பு குழுவிற்கும் தலைமை தாங்கினேன். பொலவலனையில் 16 ஆவது ஆசிர்வாதப்பர் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளிலும் நான் முக்கிய பங்காற்றினேன். அக்காலப் பகுதியில் பேரருட்திரு கர்தினாலுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளேன்” 

என கோட்டாபய ராஜபக்ஸ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை ராஜபக்ஸ விசுவாசி என கூறப்படும் கூற்றுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, மேஜர் ஜெனரல் சாலே பல ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றிய ஒரு தொழில்முறை இராணுவ அதிகாரி என்றும் அனைத்து இராணுவ அதிகாரிகளுமே அரசுக்கு விசுவாசமானவர்கள் என்றும் தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல என்றும் கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். 

தாம் 2015 இல் பாதுகாப்புச் செயலாளர் பதவியை விட்டு விலகிய பின்னர் 2019 இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  

“நானும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, அவரைப் போலவே நானும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பணியாற்றினேன். 2015 இல் பாதுகாப்பு செயலாளர் பதவியை விட்டு விலகி, நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் வரை, மேஜர் ஜெனரல் சாலேக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” 

என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

2016 இல் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து மேஜர் ஜெனரல் சலே நீக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் அப்பிரிவில் பணியாற்றவில்லை என்றும் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். 
 

“நான் ஜனாதிபதியான பிறகுதான் அவர் 2019 டிசம்பரில் இருந்து புலனாய்வு சேவையின் தலைவராக உளவுத்துறை பிரிவில் அவர் மீண்டும் இணைந்தார். எனவே மேஜர் ஜெனரல் சாலே 2018 பெப்ரவரியில் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்ததாகக் கூறப்படுவது ஒரு கட்டுக்கதை என்பது தெளிவாகிறது,” 

என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் வணாத்திவில்லு சம்பவத்தை சுட்டிக்காட்டி, தற்கொலை குண்டுதாரிகளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் தொடர்புபட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் நல்லாட்சி அரசாங்க காலத்தில் பல மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை முழு நாட்டு மக்களும் அறிந்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவிலான புலனாய்வுப் பிரிவினரையும் முப்படை உறுப்பினர்களையும் போன்று, தாமும் அப்போதைய அரசாங்கத்தின் வேட்டைக்கு உள்ளாகியதாகவும்,  2015 ஆம் ஆண்டிலிருந்து 2019  நவம்பர் மாதம் ஜனாதிபதியாகும் வரை, ஒரு பொலிஸ் பிரிவிலிருந்து மற்றுமொரு பொலிஸ் பிரிவிற்கும், ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றுமொரு நீதிமன்றத்திற்கும் சென்று கொண்டிருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரண மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதை நிராகரித்ததாக Channel 4 அலைவரிசை சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யான விடயம் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தாம் அந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு கூட சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *