உள்நாட்டு அரசிறை திருத்த சட்டமூலத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதனால் உண்ணாட்டரசிறை திருத்த சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்குங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) உண்ணாட்டரசிறை சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்துவந்த கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்நாட்டு அரசிறை திருத்த சட்டமூலத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு நூற்றுக்கு 9வீத நிலையான வட்டி வழங்குவதற்கு நாங்கள் இணங்கி இருக்கிறாேம்.
அத்துடன் 9வீத வட்டியை தீர்மானித்தது நான் அல்ல. அன்று இந்த சபையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமாகுமே இந்த தீர்மானத்தை மேற்கொண்டது. அதனால் எனக்கு இந்த குற்றச்சாட்டை தெரிவிக்கவேண்டாம். நாங்கள் இதனை முன் கொண்டுசெல்ல வேண்டும்.

