மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலக மட்டத்தில் முறைப்பாடுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் என ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சிலவற்றை வேறு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தொழில் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அந்த முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களால் சரியான முறையில் விசாரணை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் உடனடியாக விசாரணை செய்வதன் மூலம், மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

