விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக திருமலையில் போராட்டம் 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. 

இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், பலவாறு கோஷங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

முன்னதாக அப்பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை பிரசாத், தமிழ்ப் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குச்சசெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மற்றைய தரப்பில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலாவெளி பொலிஸாரினால் குறித்த தடையுத்தரவு வாசித்துக் காட்டப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சாம்பல்தீவு பாலத்துக்கு அப்பால் சென்று தமது எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *