நிலவின் தென் துருவத்திற்கு மனிதகுலத்தின் முதலடியை எடுத்துச்சென்று தனது பெயரின் அர்த்தத்தினை நிரூபித்தது விக்ரம்!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் ‘இந்தியா நிலவில் உள்ளது’ என்று அறிவித்திருக்கின்றார்.

நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அப்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இஸ்ரோ தலைவர் சோமநாத், ‘திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த முதலாம் திகதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திராயன் 3 ன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது.

கடந்த17ம் திகதி பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டர் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு 153 – 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வந்தது. அதில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணி அளவில் சந்திராயன்-3ஐ நிலவில் தரையிரக்க திட்டமிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை முதல் லேண்டரைத் தரையிரக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிரக்கும் பணியினை விஞ்ஞானிகள் தொடங்கினர்.

லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு லேண்டர் நிலவினை நோக்கி பயணித்தது. இதனைத் தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டது. அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கைகளைத் திட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனை குறித்த அறிவிப்பை இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக அவர் பெருமிதம் பொங்க குறிப்பிட்டார். அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *