உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உடனடியாக முடிவெடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
”இது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். கடந்த காலங்களில் பிரதமர் தினேஷ் குணவர்தன , தேர்தல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின்படியே செயற்பட்டார். இது குறித்து மீண்டும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய தேர்தல் ஆணைக்குழுவிடம் கலந்துரையாடி , உடனடியாக தீர்மானமொன்று எடுக்கப்படும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

