கடுகன்னாவை – பொத்தபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய சமோதி சந்தீபனி வயிற்று வலி காரணமாக கடந்த திங்கட்கிழமை கெட்டபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் செவ்வாய்கிழமை அதிகாலை அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பேராதனை வைத்தியசாலையில் அவருக்கு ஊசி ஏற்றப்பட்டதன் பின்னரே உடல் நிலை மோசமடைந்து , சமோதி உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். சமோதிக்கு எதற்காக அந்த ஊசி ஏற்றப்பட்டது? அது என்ன ஊசி என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜூண திலகரத்ன , ‘குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் விசேட பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக அவரது உடற்கூற்று மாதிரிகளும் , உணவு மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
‘Ceftriaxone’ என்ற மருந்தே அவருக்கு வழங்கப்பட்டது. இது தினமும் 2 மில்லிகிராம் என்ற அளவில் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும். வைத்தியர்களின் சிபாரிசின் அடிப்படையிலேயே இந்த மருந்து அவருக்கு வழங்கப்பட்டது.
நோயாளி ஒருவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் போது பற்றீரியா தொற்று இருப்பது இனங்காணப்பட்டால் , அவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படும். இவ்வாறு பயன்படுத்தப்படும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
எவ்வாறிருப்பினும் அதே நாளில் இந்த வைத்தியசாலையில் மேலும் பலருக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. எனினும் அவர்களில் எவருக்கும் இந்த சிக்கல் ஏற்படவில்லை. எனவே குறித்த மருந்தின் தரத்தில் பிரச்சினையா என்பது குறித்து ஆராய்ந்தே ஒரு தீர்வினை எட்ட முடியும் என்றார்.

