வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்களுக்கு மயக்க மருந்துகள் காரணமல்ல – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக பதிவாகும் மரணங்கள் தொடர்பில் வெ வ்வேறு தரப்பினராலும் , பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இவ்வாறான மரணங்களுக்கு சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளே காரணம் எனக் கூறப்படுவது உண்மையல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை நோய் காரணமாக 7 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். 

குறித்த நோயாளர்களின் மரணத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைத்தியசாலையில் ஜனவரியில் ஒரு மரணமும் , ஜூன் மாதம் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த நோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து தற்போது பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதே போன்று அண்மையில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார். அவரது மரணத்துக்கான காரணம் இதய நோய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக செய்திகளில் வெளியாகியுள்ளதைப் போன்று மயக்க மருந்து காரணமாக அவர் உயிரிழக்கவில்லை.

இவ்வாறு பதிவாகும் மரணங்களை மறைக்க வேண்டிய தேவையோ அல்லது அவை  தொடர்பில் பொய்யான காரணிகளை வெளிப்படுத்த வேண்டிய தேவையோ சுகாதார  அமைச்சுக்கு கிடையாது. பிரேத பரிசோதனைகளுக்கமைய உரிய காரணிகள் வெளிப்படுத்தப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *