28ஆம்  திகதி  வரை உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சை திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை முறைமையில் மாத்திரம் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்கு (www.doenets.lk , www.onlineexams.gov.lk) பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி செயலியான ‘DoE’ இன் ஊடாக அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய சரியாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளிலுள்ள அதிபர்களுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய பயனர் சொல் (User Name) , கடவுச் சொல் (Password) என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி நிகழ்நிலை முறைமையில் சமர்ப்பிக்க வேண்டும்.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதன் பி.டி.எப். படிவத்தை உடனடியாக அச்சுப்பிரதியெடுத்து தேவையான சந்தர்ப்பத்தின் போது அதனை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022(2023) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் , ஆனால் இம்முறையும் பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்துள்ளவர்களும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் 1911 , 011 2 784 208, 011 2 784 537, 011 2 786 616 என்ற நேரடி தொலைபேசி இலக்கங்களுக்கும் , 011 2 784 442 என்ற தொலைநகல் இலக்கத்துக்கும் , 011 2784200/201/202/263/265/280/282/443 என்ற பொதுத் தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *