ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது. என்றாலும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொண்டால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு ஒத்திசைவாக அமைத்துக்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இதனை அவர் சபைக்கு அறிவித்தார்.
சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் எதிர்ப்பு எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ்வருமாறு,
சட்டமூலத்தின் 1, 2(1)(f), 2(2), 3(2), 4(1)(a), 4(1)(b), 4(3), 17(1), 21, 31(2), 163(2)(h), 40, 48(3), 49(1)(f), 50(1)(a), 53(1), 62(1), 65, 67(5), 71(6) மற்றும் (8), 80, 93, 99, 101, 112, 149 மற்றும் 162 ஆகிய சரத்துக்கள் அரசியலமைப்புக்கு ஒத்திசைவாகாது.
எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின் இந்த ஒத்திசைவாகாத தன்மை இல்லாமல் போய்விடும்.
இந்தத் திருத்தங்களுக்கு மேலதிகமாக, சட்டமூலத்தின் 8(3), 136, 141, 142 மற்றும் 156 சரத்துக்கள் தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மூலம் மனுதாரர்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் உயர்நீதிமன்றத்தினால் குறிபிடப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டினார்.

