நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது. அடுத்து, ராஜ் மற்றும் டீகே இயக்கும் ‘சிட்டாடெல்’ வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஆங்கிலப் படத்தில் நடிக்க இருக்கிறார். சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி (Timeri N.Murari) எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘சென்னை ஸ்டோரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
படத்தை பாஃப்டா விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்குகிறார். தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ படத்தைத் தயாரித்த குரு பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்துக்காக, இயக்குநர் பிலிப் ஜான் சென்னை வந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இதில் சமந்தா, தனியார் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.

