கிரீஸ் நாட்டில் நடந்த சர்வதேசப் போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் மதுரை விவசாயியின் மகன் செல்வபிரபு திருமாறன்.
மதுரை ஊமச்சிகுளம் அருகே கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமாறன். இவரது மனைவி சுதா. மகன்கள் ராஜபிரவீன் (20), செல்வ பிரபு (18). கால்பந்து வீரரான ராஜபிரவீன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் செல்வ பிரபு, திருச்சி பிஷப் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்.
மும்முறை நீளம் தாண்டுதல் விளையாட்டு வீரரான இவர் கடந்த மே 27-ம் தேதி கிரீஸ் நாட்டில் நடந்த கிராண்ட் பிக்ஸ் சர்வதேச தடகளப் போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.78 மீ நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் வீரர் ஹர்பிந்தர் சிங் நிகழ்த்திய ஜூனியர் அளவிலான தேசிய சாதனையை (16.63 மீ) முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்வ பிரபு தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து செல்வ பிரபுவின் தந்தை திருமாறன் கூறுகையில், சிறு வயதிலிருந்தே செல்வ பிரபுவுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். ராமகிருஷ்ணா மடத்தின் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தபோது அவரது விளையாட்டு ஆர்வத்தை பார்த்து திருச்சியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப் பட்டார்.
மாநில, தேசிய அளவில் பல விருதுகள் பெற்றுள்ளார். தற்போது கிரீஸ் நாட்டில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதோடு ஜூனியர் பிரிவில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்துள்ளார். தற்போது பெங்களூரு பெல்லாரியிலுள்ள விளையாட்டுப் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார் என்று கூறினார்.
செல்வபிரபு கூறுகையில், மும்முறை நீளம் தாண்டுதல் விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே எனது லட்சியம். அதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

