தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக 15 ஆம் திகதி ரயில்வே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் பிற்போடப்பட்டிருந்தன.
இதன் காரணமாக ரயில்கள் மூலம் முன்பதிவுகளை மேற்கொண்டு ஆசனங்களை ஒதுக்கி ரயில் நிலையங்களுக்கு வருகை தந்திருந்தசுற்றுலாப் பயணிகள் பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
இதனிடையே, நுவரெலியாவிற்கு பஸ்கள் மூலம் வருகை தந்திருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் சிலர் நாணு ஓயாவிற்கு சென்றுள்ளதோடு அவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் எல்ல பகுதிக்கு செல்வதற்கு புகையிரத நிலையத்திற்கு வந்த போது ரயில்கள் சேவையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் குறித்த தரப்பினர் இது குறித்து கவலை தெரிவித்து பின்னர் அங்கிருந்து பஸ்கள் மூலம் பயணித்திருந்தனர். அதேவேளை கொழும்பிலிருந்து காலி நோக்கி ரயில்கள் மூலம் செல்ல ஆசனங்களை ஒதுக்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் சேவைகள் இன்மையால் பஸ்கள் மூலம் பயணிப்பதை காணக்கிடைத்தது.
தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நியாமற்ற வரிக்கொள்கை, அதிகரித்த வாழ்க்கைச் செலவு, மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

