ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்தும் திருத்த பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் – விமல்

ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்தும் வகையிலான சட்ட திருத்தப் பிரேரணையை ஜனாதிபதி கொண்டு வந்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

மக்கள் தமது சமகால அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் போல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற இலங்கை மேலவை கூட்டணியின் உறுப்பினர்களுக்கான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மேலவை இலங்கை சபை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலாவது கூட்டம் எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி பாணந்துறை நகரில் இடம்பெறும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்போம்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள தினத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது.

ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல, பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இடைக்கால ஜனாதிபதி.

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியதாக நடத்த வேண்டுமாயின் அதற்கான திருத்தத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு திருத்த யோசனை முன்வைக்கப்படுமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

வரி அதிகரிப்பால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தும் போது சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *