போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விதத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி இந்தியாவுக்காக ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பலர் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்தப் போராட்டம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்று, அங்கு மகா பஞ்சாயத்து கூட்டம் நடத்த, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி அவர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஜந்தர் மந்தர் சாலை நிறைவடையும் இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் போலீஸாரால் அசோகா சாலையில் அமைந்துள்ள பிரிஜ் பூஷன் சிங்கின் குடியிருப்புக்கு எதிரே கைது செய்யப்பட்டனர்.
புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் போராட்டம் நடத்தி வந்த இடத்தில் இருந்த பொருட்களை தடாலடியாக போலீஸார் அப்புறப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று கொடுத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். “இந்த வீடியோ என்னை வருந்த செய்கிறது. இதை மிக சிறந்த முறையில் கையாண்டிருக்க வேண்டும்” என அவர் ட்வீட் செய்துள்ளார். அதோடு மல்யுத்த வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

