எல்லை நிர்ணயத்துக்கான தேசிய குழுவின் முழுமையான அறிக்கையை எதிர்வரும் 31ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். 45 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை எக்காரணத்துக்காகவும் மீண்டும் அதிகரிக்க முடியாது என அக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எல்லை நிர்ணய தேசிய குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் , அது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ர|Pதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய 6 கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருக்கின்றோம். முதலாவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் , 7 கட்சிகள் மாத்திரமே அதில் பங்குபற்றியிருந்தன. அந்த கட்சிகளால் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. புதிய எல்லை நிர்ணய குழுவுக்கு மாத்திரமே அதனை செய்ய முடியும். எமது குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அதற்கமைய எல்லை நிர்ணயம் குறித்த முழுமையான அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்த அறிக்கை என்பவற்றை 31ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளோம்.
5092 தொகுதிகளை 2882 ஆகக் குறைக்குமாறு எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இது 45 சதவீதத்தை விட அதிகமாகும். உதாரணமாக அம்பலாந்தோட்டையில் 12 தொகுதிகள் காணப்பட்டன. தற்போது அவை 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறானவை தவிர்க்க முடியாதவை என்றார்.

