இலங்கை கடற்பரப்புக்குள் வெ வ்வேறு சந்தர்ப்பங்களில் எம்.டி. நியு டயமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்கள் தீ விபத்துக்குள்ளாகிய போது இந்திய கடற்படை தீயணைப்பு பணிகளுக்கு உதவியது. இதற்கான கொடுப்பனவை இந்தியா கோரியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
2020 செப்டெம்பர் மே – ஜூன் காலப்பகுதியிலும் , 2021 மே மாதத்திலும் இலங்கை கடற்பரப்புக்குள் எம்.டி.நியு டயமன் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய இரு கப்பல்கள் தீ விபத்துக்குள்ளாகின. இதன் போது தீயணைப்பு பணிகளுக்காக இந்திய கடற்படை வழங்கிய உதவிகளுக்காக இந்திய அரசு கொடுப்பனவுகளைக் கோரியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.
தீயணைப்பு பணிகளுக்கான விரைவான உதவிகளை எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்படையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய அரசு உடனடியாக இந்திய கடலோர காவல்படையின் கப்பல்களை அனுப்பியது.
இந்தக் கப்பல்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் இரண்டு தீ விபத்துகளின் அபாயகரமான விளைவுகளைக் குறைப்பதற்கும் அதன் மூலம் இலங்கையின் கடல் மற்றும் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் உதவியாக அமைந்தன.
சர்வதேச விதிமுறைகளுக்கமைய மாசுபடுத்துபவர் கொடுப்பனவு கொள்கைக்கு அமைய, இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான கொடுப்பனவுகளே கோரப்பட்டுள்ளன. இதனை இலங்கை தமது கோரிக்கையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மாறாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்தியா எந்தவிதமான கொடுப்பவுகளையோ அல்லது இழப்பீடுகளையோ கோரவில்லை. ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ கோட்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை கடற்படையினரின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் இந்திய அரசு அதன் கப்பல்களை அனுப்பி வைத்தது.
அயல் நாட்டுக்கு முதலிடம் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு – அபிவிருத்தி கோட்பாட்டின் அடிப்படையில் இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது.

