23 வயதுக்குட்பட்ட வட மாகாண பெண்கள் கிரிக்கெட் : யாழ். மாவட்டம் சம்பியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த 23 வயதுக்குட்பட்ட வட மாகாண மாவட்டங்களுக்கு இடையிலான பெண்கள் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் யாழ். மாவட்ட அணி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்ட அணிகள் வட மாகாண பெண்கள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.

இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்தில் சம்பியனான யாழ். மாவட்ட அணி அடுத்த சுற்றில் ஏனைய மாகாணங்களில் சம்பியனான மாவட்ட அணிகளை எதிர்த்தாடவுள்ளது.

அணித் தலைவி எம். மதுரிகா, ஜே. தேவகி, எஸ். கிறிஸ்டிகா, கே. சதுஷனா, ஆர். நிதர்ஷனா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் பாஸ்கரன் ஷானு, எம். ஷர்மிலி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் யாழ். மாவட்ட அணியின் வெற்றிகளில் பிரதான பங்காற்றின.

யாழ். மாவட்ட பெண்கள் அணிக்கு விபுலன் பயிற்சி அளித்து வருகிறார்.

23 வயதுக்குட்பட்ட யாழ். மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் பாஸ்கரன் ஷானு, இலங்கை தேசிய மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 4 போட்டிகளில் விளையாடிய யாழ். மாவட்ட அணி 3இல் வெற்றிபெற்றது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

போட்டி முடிவுகள் (சுருக்கம்)

கிளிநொச்சி மாவட்டத்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்களால் யாழ். மாவட்டம் வெற்றிபெற்றது.

கிளிநொச்சி 13.4 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 47 (கே. துஷாந்தினி 31, ஜே. தேவகி 18 – 5 விக்., எஸ். கிறிஸ்டிகா 3 – 3 விக்., எம். மதுரிகா 9 – 1 விக்.)

யாழ்ப்பாணம் 8.2 ஓவர்களில் 48 – 2 விக். (எம். ஷர்மிலி 12, பி. ஷானு 9)

வவுனியா மாவட்டத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்களால் யாழ். மாவட்டம் வெற்றிபெற்றது.

வவுனியா 15.2 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 34 (கே. சதுஷனா 6 – 4 விக்., ஜே. தேவகி 4 – 3 விக்.)

யாழ்ப்பாணம் 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 35 (எம். ஷர்மிலி 18 ஆ.இ., பி. ஷானு 8 ஆ.இ.)

முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் யாழ். மாவட்டத்துக்கும் இடையிலான போட்டி மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

மன்னார் மாட்டத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்களால் யாழ். மாவட்டம் வெற்றிபெற்றது.

மன்னார் 19.5 ஓவர்களில் 65 – 10 விக். (ரி. ரீதனா 26, எம். மதுரிகா 13 – 4 விக்., ஆர். நிதர்ஷனா 11 – 3 விக்., எஸ். கிறிஸ்டிகா 16 – 2 விக்.) 

யாழ்ப்பாணம் 10.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 (பி. ஷானு 31 ஆ.இ., எம். ஷர்மிலி 17 ஆ.இ.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *