ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி லீக் ஆட்டம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு கொல்கத்தா அணி முட்டுக்கட்டை போட்டது. சிஎஸ்கேவை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டி முடிவடைந்ததும் தோனி தனது சக அணி வீரர்களுடன் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு நெஞ்சுருக நன்றி தெரிவித்தார். முன்னதாக மைதானம் முழுவதும் `எல்லோருக்கும் நன்றி’, `மீண்டும் சந்திப்போம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

