“எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர்”, “எல்லாருக்காகவும் முன் நின்றவர்”, “அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர்” என்று மனோபாலாவுக்கு தமிழ்த் திரையுலகினர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்: “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.”
இயக்குநர் டி.ராஜேந்தர்: “இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”

