சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை திறைசேரி மேற்கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார்.
இதன்போது எழுந்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இராச்சியங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்களை சட்டமாக்குவது தொடர்பில் சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பான அத்தியாயத்தில் 157 ஆவது உறுப்புரையில் விடயதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
157 ஆவது உறுப்புரையின் பிரகாரமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளை சட்டமாக்காமல் வழமை போல் ஒரு ஒப்பந்தமாக செயற்படுத்தலாம். ஆகவே நிபந்தனை செயற்படுத்தல் முறைமை தொடர்பில் குறிப்பிட வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஜனாதிபதி நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளோம்.
அரச நிதி சட்டம் மற்றும் வருமான சட்டம் ஆகிய பிரதான இரு சட்டங்களை அடிப்படையாக கொண்டு நிபந்தனைகளை செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நிபந்தனைகளை செயற்படுத்த ஒரு சில சட்டங்களை இயற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை திறைசேரி மேற்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தல் தொடர்பில் நிதியமைச்சின் இராஜாங்க அமைச்சர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றார்.

