அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலியான தகவலை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் கணினிக் குற்றவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அக்குரணை நகரில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இரண்டு சந்தர்ப்பங்களில் 118 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இந்த தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய பொலிஸ் கணினி குற்றவியல் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, 3 நாட்களுக்குள் அதாவது இன்று காலை இந்த போலியான தகவலை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
ஹாரிஸ்பத்துவ பட்டுகொட பகுதியை சேர்ந்த 21 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
குறித்த சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள போதிலும், அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கணினிக் குற்றவியல் பிரிவினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

