உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொள்ள முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையிலேயே பேராயர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும், பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கோரியும் இந்த விசேட ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய பேராயர் ,
தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் தயக்கம் காட்டி, பகிரங்கமாக முதலைக் கண்ணீர் சிந்துகின்றனர். நேர்மையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவது வேதனையளிக்கிறது.
அரச தரப்பின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி தெளிவாக புலப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையுடன் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அண்மையில் அறிவித்த தற்போதைய ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றார்களா ?
மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மனித மேன்மையையும் அழித்து, ஏகாதிபத்தியத்துடன் மக்களின் இறையாண்மையை எட்டி உதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது என்றார்.

