உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு செய்யாதுபோனால், சுதந்திரமாகவும், அரசியல் பாதுகாப்புடன் பல்வேறு சலுகைகளையும் அனுபவித்து வருபவர்கள் இது போன்ற இன்னும் பல குற்றங்களை செய்வதற்கு தயங்க மாட்டார்கள் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 4 ஆண்டுகளாகிறது. எவ்வளவு காலம் சென்றாலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரும் எமது போராட்டத்தை கைவிட்டு விட்டால், இந்நாட்டில் ஒரு ஆபத்தான முன்னுதாரணம் கட்டியெழுப்பட வாய்ப்பாக அமைந்துவிடும் என நம்புவதாககவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரை நீர்கொழும்பு – கொழும்பு வீதியின் இருமருங்கிலும், எம்மால் முன்னெடுக்கப்படும் ‘மக்கள் மதில்’ பேரணியில் இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி கலந்துகொண்டு, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரவும், குண்டுத்தாக்குதல்களில் பலியான மற்றும் படுகாயமடைந்தவர்களை நினைவும் கூரவும் ஒன்றுபடுமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நாட்டின் சகல மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

