மியான்மர் : மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. போராளிகள் குழு மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ராணுவம், அப்பாவி பொது மக்களை கொன்று குவித்து வருவது சர்வதேச அரங்கில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மனித உரிமைகள் ஆணையமும் பலமுறை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
ஆனால் தாக்குதல் சம்பவங்களுக்கு போராளி குழுக்களே காரணம் என கூறும் ராணுவம், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இந்த நிலையில், சாஜைன் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் 150 பேர் கூடி இருந்த போது, இந்த தாக்குதல் அரங்கேறியதாக தெரியவந்துள்ளது. பலரும் படுகாயம் அடைந்ததால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா.அமைப்பின் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

