முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒப்பிடுவது பொறுத்தமற்றது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டை ஒன்றுப்படுத்தினாரே தவிர பிளவுப்படுத்த முயற்சிக்கவில்லை.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தி விட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தரப்பினரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒப்பிட்டு ஒருதரப்பினர் அரசியல் பிரசாரம் செய்வது முற்றிலும் வெறுக்கத்தக்கது. ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தோற்றம் பெற்ற போது எமது அரசாங்கத்தின் தலைவர் கோட்டபய ராஜபக்ஷ நெருக்கடியான சூழலை சமாளிக்க தவறினார்.
பொருளாதாரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். குறுகிய காலத்திற்குள் சவால்களை வெற்றிக் கொண்ட கௌரவத்தை அவருக்கு வழங்குவோம். அதற்காக பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.
உலக வரைபடத்தில் இலங்கை ஒற்றையாட்சி நாடாக காணப்படுமாயின் அதற்கான கௌவரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும். ராஜபக்ஷர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்தார்களே தவிர நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு துணை செல்லவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். நாட்டு மக்கள் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. எமது கட்சியின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்றார்.

