இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளது. இதில் பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும். வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வல்லரசுகளுக்கிடையிலான இப்போட்டி நிலைமையானது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க முடியாது என்பதால் , அனைத்திற்கும் தயாராகும் வகையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பலம்மிக்க முப்படையை உருவாக்குவதற்காக ‘பாதுகாப்பு 2030’ செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் விமானப்படை தளத்தில் நேற்று சனிக்கிழமை முப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான முதற்படியாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நானும் , பிரதமரும், ஏனைய அமைச்சர்களும் நாட்டுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். பாராளுமன்றத்திற்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தியதன் பின்னர் , கடந்த வாரம் வர்த்தக சமூகத்தினரை சந்தர்ப்பதற்கு வாய்ப்பு கிட்டியது. இன்று பாதுகாப்பு படையினரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை பல்கலைக்கழகங்களின் பொருளாதார விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளேன். இம்மாதம் இது தொடர்பில் அனைவருக்கும் தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டில் பெரும் நெருக்கடி நிலவிய நிலையில் கடந்த ஆண்டு ஜூலை நான் ஜனநாதிபதியாக பொறுப்பேற்றேன். இது தொடர்பில் புதிதாகக் கூற வேண்டியதில்லை. இறுதியில் பாராளுமன்றத்தையும் சுற்றி வளைக்க முற்பட்டனர். அது நடந்திருந்தால் இன்று நாட்டில் நிர்வாகமொன்று இருந்திருக்காது. நாடு அராஜகமடைந்து சட்டவாட்சி கேள்விகுள்ளாக்கப்பட்டிருக்கும். நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டி பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய சூழல் காணப்பட்டிருக்காது என்றார்.


