50 விக்கெட் வீழ்த்தி இலங்கை வீரர் ஜெயசூர்யா சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா விரைவாக 50 விக்கெட்களை வீழ்த்தி 72 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா இந்த மைல் கல் சாதனையை காலேவில் நடைபெற்று வந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று நிகழ்த்தினார். அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங்கை ஆட்டமிழக்கச் செய்த போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 50 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் பிரபாத் ஜெயசூர்யா.

31 வயதான பிரபாத் ஜெயசூர்யா தனது 7-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1951-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் 8 போட்டிகளில் 50 விக்கெட்களை சாய்த்திருந்ததே சாதனையாக இருந்தது. 72 வருடங்களுக்குப் பிறகு இதை முறியடித்து உள்ளார் பிரபாத் ஜெயசூர்யா.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் அரங்கில் விரைவாக 50 விக்கெட்களை கைப்பற்றியவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சார்லி டர்னர் முதலிடத்தில் உள்ளார். அவர், 1888-ம் ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். இந்த வகை சாதனையில் பிரபாத் ஜெயசூர்யா 2-வது இடத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் ரிச்சர்ட்சன், தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்களும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்களை வேட்டையாடி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *