நாட்டின் பொருளாதார நிலைமை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஸ்திரப்படுத்தப்படுவதோடு , 25 ஆண்டுகளுக்குள் இலங்கை உயர் வருமானம் பெறும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றப்படும். இதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் பங்களிப்புடன் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படும். இந்த இலக்கை அடைவதற்கு இளம் தலைமுறையினர் பெரும் பங்களிப்பை வழங்குவர் என உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களால் தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக இவ்வாண்டின் முதல் காலாண்டில் 210 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :
2022இல் காணப்பட்ட நிலைமையை மீண்டும் ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. 2048இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்குவதே எமது இலக்காகும். பொருளாதார மாற்றத்துக்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் கூட்டாய்வு முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு விசேட செயலணி நிறுவப்படும். 5 ஆண்டுகளில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்படுவதோடு , 25 ஆண்டுகளில் இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றப்படும். முதல் 5 ஆண்டுகளின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்க அடுத்த தலைமுறை தயாராக வேண்டும்.
எமது தீர்மானங்கள் கடினமான இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும். பணவீக்கம் வீழ்ச்சியடைவதற்கமைய வாழ்க்கை சுமையும் படிப்படியாகக் குறைவடையும்.
கடினமான பயணத்தின் போது அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொண்ட நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த வழியில் இன்னும் சில காலம் தொடர்ந்து செல்வதன் மூலம் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைத்து, சிறந்தவொரு பொருளாதாரத்தை எமக்கு ஏற்படுத்த முடியும். இலங்கை இப்போது முன்னேற்றகரமான மற்றும் வளமான பயணத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளது.
நாட்டை முன்னேற்றுவதற்கு பொருளாதார சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும். பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்’நாட்டை விற்கப் போகின்றார்கள்’ என்று கோஷமெழுப்புகின்றனர்.
இவற்றுக்கு இனி நீங்கள் ஏமாற மாட்டீர்கள். நவீன உலகத்துக்கும், தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான். பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
இந்தப் பயணம் எளிதானதல்ல. மேலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அந்தச் சவால்கள் அனைத்தையும் வெற்றிகொள்வோம். கடந்த ஆண்டு நெருக்கடிகள் தீவிரமடைந்த போது நாட்டில் காணப்பட்ட நிலைவரம் , நான் பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எவரும் மறந்திருக்க முடியாது. இதன்போது இந்தியா, பங்களாதேஷ், ஜப்பான், சீனா என்பன மனிதாபிமான உதவிகளை வழங்கின. இந்நாடுகளும் , பெரிஸ் கிளப் ஆகியவையும் கடன் மறுசீரமைப்புக்கு இனக்கம் தெரிவித்தமைக்கு நன்றி கூறுகின்றேன் என்றார்.

