2024 ஆம் ஆண்டுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் – ஜி.எல்.பீரிஸ்

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அரசாங்கம் படுதோல்வி அடையும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று கிடையாது.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அரசாங்கம் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.பொருளாதாரப் பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டு மக்களின் தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேசிய  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியான நிலையில் உள்ளது.தேர்தல் இல்லையென்றால் தேர்தல்கள் ஆணைக்குழு அவசியமற்றது.

உரிய காலத்தில் இடம்பெற வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் இடம்பெற வேண்டிய ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.அரசாங்கமும் அதற்கு சார்பாக செயற்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது,ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *