ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வியட்நாம் நாட்டின் துணை ஜனாதிபதி ட்ரான் லு குவாங்கிற்கும் இடையே நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (16) சீனாவில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.
அரச மற்றும் தனியார் துறைகளில் தற்போதுள்ள கூட்டு முயற்சிகளுக்கு மேலதிகமாக புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளை ஆராயுமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு வியட்நாம் துணை ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
வியட்நாம் நாட்டின் முதலீடுகளின் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான இலங்கை பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் மீன்பிடி, மாற்று எரிசக்தி மற்றும் அகழ்வு ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி விவசாயத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே விமானப் பயணத்தை அதிகரிப்பது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும் என்பதால், பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்க வியட்நாம் இணக்கம் தெரிவித்தது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (RECP) உறுப்பு நாடுகள் உட்பட 60 நாடுகள் பங்குபற்றிய 7வது சீன தெற்காசிய கண்காட்சி மற்றும் 27,வது சீன குன்மிங் ஏற்றுமதி இறக்குமதி கண்காட்சியில் பங்குபற்றிய.
இந்தோனேசியா, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகளின் உப ஜனாதிபதிகள், வியட்நாம் பிரதிப் பிரதமர், மாலைதீவு வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பலருடனும் பிரதமர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

